Friday, March 09, 2018

அரசுப் பணிகள் சீரமைப்பா, பணியிடங்களைக் குறைக்கும் முயற்சியா?

ரசுத் துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. எந்தெந்தப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்யவுள்ளது. அரசுத் துறைகளில் பல்லாயிரக் கணக்கான காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
எந்தவொரு அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும், அங்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. ஓய்வுபெற்றவர்கள், பணியிட மாற்றம் பெற்றவர்களின் இடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. தலைமைச் செயலகம் முதற்கொண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் வரை காலிப் பணியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்தபடியிருக்கிறது. மாவட்டத் துணை ஆட்சியர் பணிகளுக்கான குரூப் 1 பணிகள் தொடங்கி, அலுவலக உதவியாளர்களுக்கான குரூப் 4 பணிகள் வரை அனைத்துப் பணி களுக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.
சில அரசு அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்கள் இருக்கின்றன என்பதையும், மிகச் சில அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவற்றைக் கண்டறிந்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கிவிட வேண்டுமேயொழிய, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட முடிவெடுப்பது தவறானது. அரசுப் பணிகளில் உடனடியாகச் செயல்பட வேண்டியவை, நீண்ட கால நோக்கில் நன்மை பயப்பவை என்று அதன் நோக்கங்கள் வேறுபடுகின்றன. ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகளும், மாவட்ட அருங்காட்சியகத் தின் பணிகளும் வெவ்வேறானவை. ஆனால், இரண்டையுமே அரசு தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். எந்தெந்தப் பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுக்கும்போது, இந்தக் காரணங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் குழுவை நியமித்துள்ள தமிழக அரசின் நோக்கம், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதுதான். அதில் கொஞ்சம் உண்மையிருக்கிறது. ஆனால், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் செலவுகளைக் குறைத்துவிடலாம் என்று வெறுமனே வரவு - செலவுப் பிரச்சினையாக மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகக் கூடாது.
2001 முதல் 2005 வரையில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பணி நியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. அப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான வாய்ப்பை இழந்தார்கள். மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டபோது, வயது வரம்புகள் தளர்த்தப்பட்டபோதும்கூடத் தகுதியான மாணவர்கள் பலரும் அந்த வாய்ப்பைப் பெற முடியாமல் போனது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்துள்ள ஆட்சிப் பணித் துறைக்கான தேர்விலும் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணிகளுக்குப் போட்டியிடும் மாணவர் களுக்கு, அது கிடைக்காமல் போகும்பட்சத்தில், தமிழக அரசுப் பணியாவது கிடைத்துவந்தது. இப்போது அதற்கும் முட்டுக்கட்டை போடும் செயலைத் தமிழக அரசே செய்வது நியாயமாகாது! நன்றி : thehindu
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.