’தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., இலவச
சேர்க்கைக்கான, விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு
அறிவித்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார்
பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், வருவாய் குறைந்த பிரிவு மாணவர்கள்
சேர்க்கப்படுவர்.
இதற்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே, கல்வி
நிறுவனங்களுக்கு வழங்கும். இந்த நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதிலும்,
மாணவர்களை சேர்ப்பதிலும், தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன், செய்தி வெளியானது.
அதனால், புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழான, இலவச மாணவர் சேர்க்கை,
ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில், அரசு
தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள், ஆன்
லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இ - சேவை மையங்களை பயன்படுத்தியும்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட விபரம், விண்ணப்ப நிலை
போன்ற தகவல்கள், மொபைல் போன் எண்ணுக்கு வரும்.வரும் கல்வி ஆண்டுக்கான
மாணவர் சேர்க்கை, ஏப்., 20ல் துவங்கி, மே, 18ல் முடிகிறது.
9,000 தனியார் சுயநிதி, மெட்ரிக் மற்றும்,
’பிரைமரி’ பள்ளிகளில், ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து, 262 இடங்கள், இலவச
சேர்க்கைக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. சிறுபான்மை அந்தஸ்துள்ள பள்ளிகளில், இலவச
மாணவர் சேர்க்கை நடக்காது.
முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட மற்றும் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள்,
வட்டார வளமைய அதிகாரிகள் அலுவலங்களில், மாணவர்கள் எந்த கட்டணமும் இன்றி
விண்ணப்பிக்கலாம் என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னுரிமை யாருக்கு?
ஆன்லைனில் பதியப்படும் விண்ணப்பங் கள், அரசு
அதிகாரிகள், மாவட்ட கலெக்டரின் பிரதிநிதிகளின் மேற்பார்வையில்,
வெளிப்படையான குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.
ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி.,யால்
பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு
தொழிலாளியின் குழந்தைகள், மாற்று திறனாளிகள் போன்றோருக்கு, குலுக்கலுக்கு
முன்னதாக, முன்னுரிமையில் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.