மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன்
சிபாரிசுப்படி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதில் 196 விதமான அலவன்ஸ்
(படிகள்)களை சம்பள கமிஷன் மாற்றி அமைத்து சிபாரிசு செய்து இருந்தது. இதை
அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்க நிதித்துறை செயலாளர் அசோக் லவசா
தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது ஊழியர்களுக்கான அலவன்ஸ்களை மாற்றி அமைத்தது. இதை
அமல்படுத்துவது குறித்து பொருளாதார வல்லுனர்களுடன் மத்திய நிதி அமைச்சகம்
ஆலோசனை நடத்தியது.
திருத்தி அமைக்கப்பட்ட அலவன்ஸ்கள் விவரம் அறிவிப்பதாக மத்திய அரசு
ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். ஊழியர்
சங்கங்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் இந்த வாரம் அலவன்ஸ்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று
மத்திய அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக குழு
அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பான பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் ஆலோசனை கூட்டம் மந்திரி
சபை செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் நடந்தது. இதில் உள்துறை, நிதித்துறை,
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ரெயில்வே உள்ளிட்ட துறைகளின் செயலாளர்கள்
கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களின் நலனில் பிரதமர் மோடி அக்கறை செலுத்தி வருவதாகவும்
திருத்தி அமைக்கப்பட்ட அலவன்ஸ் வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.29,300 கோடி
நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.