Saturday, April 08, 2017

கலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வில், பகுதிநேர ஆசிரியர்கள், பணியிட மாறுதல் பெற, முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், கடந்த 2012ல், நாடு முழுவதும், பகுதிநேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட, எட்டுப்பாட பிரிவுகளுக்கு, 16 ஆயிரத்து 549 பேர், பணியில் அமர்த்தப்பட்டனர். 


இவர்களுக்கு, அதிகபட்சம் நான்கு பள்ளிகளில் பணிப்புரிய அனுமதித்து, மாதந்தோறும், 5,000 ரூபாய், ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

அசாம், ஒடிஷா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம், 15 ஆயிரம் ரூபாய் வரை, வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், கடந்த 2015ல், ரூ.2,000 ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கு பின், எவ்வித சலுகைகளும் அளிக்கப்படவில்லை. இதனால், 1,380 பேர், பணியில் இருந்து விலகிக் கொண்டனர்.

கோவை மாவட்டத்தில், 538 பகுதிநேர ஆசிரியர்கள், நியமிக்கப்பட்ட நிலையில், போதிய சம்பளம் வழங்கப்படாததால், 48 பேர், ராஜினாமா செய்தனர். மேலும், ஒரு பள்ளியில் மட்டுமே பணிப்புரிய அனுமதித்ததால், ரூ.7,000 சம்பளத்தில், அடிப்படை செலவுகளை சமாளிக்க, திண்டாட வேண்டியுள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியைகளுக்கு, குடியிருப்பில் இருந்து கிட்டத்தட்ட, 60 கி.மீ., துாரத்திற்கு அப்பால் உள்ள பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும், பொதுமாறுதல் கலந்தாய்வில், பகுதிநேர ஆசிரியர்கள், பணியிட மாறுதல் பெற, முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ”பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள, பல விதிகள் பின்பற்றப்படவில்லை.

”மாத ஊதியம் தவிர, எந்த சலுகையும் அளிக்காததால், அதிக துார அலைக்கழிப்பதால்,மன அழுத்தம் ஏற்படுகிறது. குடியிருப்புக்கு அருகிலுள்ள பள்ளிகளில், பணியிட மாறுதல் பெற, பகுதிநேர ஆசிரியர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும்,” என்றார்.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.