ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப விநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம்விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.