Wednesday, February 15, 2017

மின்வாரிய பணிக்கான தேர்வு: பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை எழுத்து தேர்வின் அடிப்படையில் நிரப்பவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,
சென்னை மூலக்கடையை சேர்ந்தவர் டி.செந்தில்குமார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில், தொழில்நுட்ப பிரிவு உதவியாளர்கள், மெக்கானிக்கல், களஉதவியாளர்கள் உள்ளிட்ட பல பதவிகளில் மொத்தம் ஆயிரத்து 475 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, இளநிலை உதவியாளர், கணக்கர், தட்டச்சர் உள்ளிட்ட பல பதவிகளில், 700 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப்பணியிடங்களை எல்லாம் நிரப்புவது குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28 மற்றும் 29–ந் தேதிகளில் இரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதன்படி, நடந்த எழுத்து தேர்வில் பலர் பங்கேற்றனர். இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடத்தப்படும் நேர்காணல் தேர்வுக்கு 15 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.
ரூ.10 ஆயிரம் அபராதம்
எனவே, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தகுந்த நபர்களை தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் மனுதாரர் பங்கேற்கவில்லை. அவருக்கும், இந்த தேர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், பொதுநல வழக்கு என்ற பெயரில் வழக்கை தாக்கல் செய்து, இந்த ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடித்துள்ளார். எனவே, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த தொகையை ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்துக்கு அவர் வழங்கவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.